தமிழ்
Sorah Al-Hijr ( The Rocky Tract )
Verses Number 99
அலிஃப், லாம், றா. (நபியே!) இவை வேதத்தினுடையவும் தெளிவான திருக்குர்ஆனுடையவுமான வசனங்களாகும்.
தாங்களும் முஸ்லீம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள்.
(இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
எந்த ஊர்(வாசி)களையும் (அவர்களுடைய பாவங்களின் காரணமாக) அவர்களுக்கெனக் குறிப்பிட்ட காலத்தவணையிலன்றி நாம் அழித்துவிடுவதுமில்லை.
எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணைக்கு முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.
"நீர் உண்மையாளரில் ஒருவராக இருப்பின் நீர் எங்களிடத்தில் மலக்குகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?" (என்றும் கூறுகின்றனர்.)
நாம் மலக்குகளை உண்மையான (தக்க காரணத்தோடு அல்லாமல் இறக்குவதில்லை அப்(படி இறக்கப்படும்) போது அ(ந் நிராகரிப்ப)வர்கள் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்.
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம்.
எனினும் அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை.
இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ் விஷமத்)தைப் புகுத்தி விடுகிறோம்.
அவர்கள் இ(வ் வேதத்)தின் மீது ஈமான் கொள்ள மாட்டார்கள்; அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் இந்நடை முறையும் (இறுதியில் அவர்கள் அழிவும்) நிகழ்ந்தே வந்துள்ளன.
இவர்களுக்காக நாம், வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுவதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்).
"நம் பார்வைகளெல்லாம் மயக்கப்பட்டு விட்டன இல்லை! நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டமாகி விட்டோம்" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.
விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நாம் அவற்றைப் பாதுகாத்தோம்.
திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஷைத்தானைத்தவிர (அப்போது) பிரகாசமான தீப்பந்தம் அந்த ஷைத்தானை (விரட்டிப்) பின் பற்றும்.
وَالأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ شَيْءٍ مَّوْزُونٍ ↓
பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளிவின் படி அதில் நாம் முளைப்பித்தோம்.
நாம் அதில் உங்களுக்கும் நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆக்கியுள்ளோம்.
ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை.
وَأَرْسَلْنَا الرِّيَاحَ لَوَاقِحَ فَأَنزَلْنَا مِنَ السَّمَاء مَاء فَأَسْقَيْنَاكُمُوهُ وَمَا أَنتُمْ لَهُ بِخَازِنِينَ ↓
இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை.
நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம்.
உங்களில் முந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்; பிந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்.
நிச்சயமாக உம்முடைய இறைவன் (இறுதி நாளில்) அவர்களை ஒன்று திரட்டுவான்; நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.
ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.
(அதற்கு) முன்னர் ஜின்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம்.
(நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும்,
அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், "அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!
அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.
இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.
"இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?" என்று (இறைவன்) கேட்டான்.
அதற்கு இப்லீஸ், "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!" என்று கூறினான்.
"அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்."
"மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!" என்று (இறைவனும்) கூறினான்.
"என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!" என்று இப்லீஸ் கூறினான்.
"நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;"
"குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்" என்று அல்லாஹ் கூறினான்.
(அதற்கு இப்லீஸ்,) "என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
"அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர" என்று கூறினான்.
(அதற்கு இறைவன் "அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி, என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும்.
"நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர" என்று கூறினான்.
நிச்சயமாக (உன்மைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்.
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று) இருப்பார்கள்.
(அவர்களை நோக்கி) "சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்" (என்று கூறப்படும்).
மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.
அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர்.
(நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக "நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையவனாகவும் இருக்கின்றேன்."
"(ஆயினும்) நிச்சயமாக என்னுடைய வேதனையும் நோவினைமிக்கதாகவே இருக்கும்" (என்றும் சொல்லும்).
இன்னும், இப்றாஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக!
அவர்கள் அவரிடம் வந்து, "உங்களுக்குச் சாந்தி (ஸலாமுன்) உண்டாவதாக!" என்று சொன்ன போது அவர், "நாம் உங்களைப்பற்றி பயப்படுகிறோம்" என்று கூறினார்.
அதற்கு அவர்கள், "பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்" என்று கூறினார்கள்.
அதற்கவர், "என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?" எனக் கேட்டார்.
அதற்கவர்கள், "மெய்யாகவே, நாங்கள் உமக்கு நன்மாராயங் கூறினோம்; ஆகவே நீர் (அதுபற்றி) நிராசை கொண்டோரில் ஒருவராகி விடாதீர்!" என்று கூறினார்கள்.
"வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசைக் கொள்வர்" என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார்,
"(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய காரியமென்ன?" என்று (இப்றாஹீம்) கேட்டார்.
அதற்கவர்கள், "குற்றவாளிகளான ஒரு கூட்டத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.
"லூத்தின் கிளையாரைத் தவிர, அவர்களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்.
ஆனால் அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர - நிச்சயமாக அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட்டோம்" என்று (வானவர்கள்) கூறினார்கள்.
(இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது.
(அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்" என்று (லூத்) சொன்னார்,
(அதற்கு அவர்கள்,) "அல்ல, (உம் கூட்டதாராகிய) இவர்கள் எதைச் சந்தேகித்தார்களோ, அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்;
(உறுதியாக நிகழவிருக்கும்) உண்மையையே உம்மிடம் நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாகவே இருக்கிறோம்.
فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِّنَ اللَّيْلِ وَاتَّبِعْ أَدْبَارَهُمْ وَلاَ يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌ وَامْضُواْ حَيْثُ تُؤْمَرُونَ ↓
ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள்.
மேலும், 'இவர்கள் யாவரும் அதிகாலையிலேயே நிச்சயமாக வேரறுக்கப்பட்டு விடுவார்கள் (என்னும்) அக்காரியத்தையும் நாம் முடிவாக அவருக்கு அறிவித்தோம்'.
(லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள்.
(லூத் வந்தவர்களை நோக்கி;) "நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;"
"அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்" என்றும் கூறினார்.
அதற்கவர்கள், "உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?" என்று கேட்டார்கள்.
அதற்கவர், "இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்" என்று கூறினார்.
(நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.
ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது.
பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம்.
நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் பயணத்தில்) வரப்போகும் வழியில்தான் இருக்கிறது.
திடமாக முஃமின்களுக்கு இதில் (தகுந்த) அத்தாட்சி இருக்கிறது.
இன்னும், அடர்ந்த சோலைகளில் வசித்திருந்த (ஷுஐபுடைய) சமூகத்தாரும் அக்கிரமக்காரர்களாக இருந்தனர்.
எனவே அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்; (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் பகிரங்கமான (போக்குவரத்து) வழியில் தான் இருக்கின்றன.
(இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.
அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள்.
ஆனால், அவர்களையும் அதிகாலையில் பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது,
அப்போது அவர்கள் (தம் பாதுகாப்புக்கென) அமைத்துக் கொண்டிருந்தவை எதுவும் அவர்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை.
وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلاَّ بِالْحَقِّ وَإِنَّ السَّاعَةَ لآتِيَةٌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيلَ ↓
நாம் வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வருவதாகவே உள்ளது ஆதலால் (இவர்களின் தவறுகளை) முற்றாகப் புறக்கணித்துவிடும்.
நிச்சயமாக உம்முடைய இறைவன் (எல்லாவற்றையும்) படைத்தவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான (இந்த) குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம்.
لاَ تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَى مَا مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا مِّنْهُمْ وَلاَ تَحْزَنْ عَلَيْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ ↓
அவர்களிலிருந்து, சில வகுப்பினரை இவ்வுலகில் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின் பால் நீர் உமது கண்களை நீட்டாதீர்; அவர்களுக்காக நீர் துக்கப்படவும் வேண்டாம்; ஆனால் உம் (அன்பென்னும்) இறக்கையை முஃமின்கள் மீது இறக்கும்.
"பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனாக நிச்சயமாக நான் இருக்கின்றேன்" என்று நீர் கூறுவீராக
(நபியே! முன் வேதங்களை) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே,
இந்த குர்ஆனை பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்).
உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் அவர்களனைவரையும் விசாரிப்போம்.
அவர்கள் செய்து கொண்டிருந்த (எல்லாச்) செயல்களைப் பற்றியும், (நாம் விசாரிப்போம்).
ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!
உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம்.
இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தையும் (இணை) ஆக்கிக் கொள்கிறார்கள்; (இதன் பலனை இவர்கள்) பின்னர் அறிந்து கொள்வார்கள்.
(நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம்.
நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக!
உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!