தமிழ்
Sorah Ad-Dukhan ( The Smoke )
Verses Number 59
ஹா, மீம்.
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.
அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.
அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம்.
(அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்).
அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.
ஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.
(அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; "இது நோவினை செய்யும் வேதனையாகும்."
"எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்" (எனக் கூறுவர்).
நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார்.
அவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) "கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்" எனக் கூறினர்.
நிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே.
ஒருநாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம்.
அன்றியும், நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய சமூகத்தவரை நிச்சயமாகச் சோதித்தோம்; கண்ணியமான தூதரும் அவர்களிடம் வந்தார்.
அவர் (கூறினார்;) "என்னிடம் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
அன்றியும், "நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன்.
அன்றியும், "என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.
"மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளங்கள்" (என்று மூஸா கூறினார்).
(அவர்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தார்கள்). "நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே இருக்கிறார்கள்" என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்.
"என் அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க நிச்சயமாக நீங்கள பின் தொடரப்படுவீர்கள்" (என்று இறைவன் கூறினான்.)
அன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி" இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்).
எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்?
இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்).
இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்).
அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம்.
ஆகவே, அவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை (தப்பித்துக் கொள்ள) அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை.
நாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்;
ஃபிர்அவ்னை விட்டும் (காப்பாற்றினோம்) நிச்சயமாக அவன் ஆணவம் கொண்டவனாக, வரம்பு மீறியவனாக இருந்தான்.
நிச்சயமாக, நாம் நன்கு தெரிந்தே அவர்களை உலக மக்களிலிருந்து தேர்ந்தெடுத்தோம்.
அன்றியும், நாம் அவர்களுக்கு அத்தாட்சிகளை கொடுத்தோம்; அவற்றில் துலக்கமான சோதனை இருந்தது.
நிச்சயமாக அவர்கள் (மக்கா காஃபிர்கள்) கூறுகிறார்கள்;
"எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு எதுவுமில்லை நாங்கள் மீண்டும் எழுப்படுபவர்கள் அல்லர்."
"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள் மூதாதையரை (திரும்பக்) கொண்டு வாருங்கள்."
أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَالَّذِينَ مِن قَبْلِهِمْ أَهْلَكْنَاهُمْ إِنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ ↓
இவர்களும் மேலா? அல்லது 'துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னருந்தவர்களுமா? நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம்.
மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.
இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.
ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
(எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.
நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே).
பாவிகளுக்குரிய உணவு
அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.
வெந்நீர் கொதிப்பதைப் போல்.
"அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.
"பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.
"நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்!
"நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களே அதுவாகும்" (என்று அவர்களிடம் சொல்லப்படும்).
பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள்.
சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்).
ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பீதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்.
இவ்வாறே (அங்கு நடைபெறும்) மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.
அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள்.
முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்.
(இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியமாகும்.
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.
ஆகவே, நீரும் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.