தமிழ்
Sorah Al-Ghashiya ( The Overwhelming )
Verses Number 26
சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.
அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
உன்னதமான சுவர்க்கச் சோலையில்-
அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.